சென்னை: பொதுப்பணித்துறை சாலை அமைக்கும் பணிக்கான பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப் பணித்துறையின் பணிகளுக்காக பேக்கேஜ் டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது. இதனால், சிறிய பணிகளை ஒருங்கிணைத்து கோடி ரூபாய்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சிறிய ஒப்பந்தாரர்கள் பாதிக்கப்பட்டனர். பெரிய ஒப்பந்ததாரர்கள் ஆதாயம் அடையும் வகையில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடன் துறையின் அமைச்சர் வேலு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேக்கேஜ் முறை ரத்து செய்யப்படும் என பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த நிலையில், அதை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணிதுறை செயலர் சந்தீப் சக்சேனா உத்தர விட்டுள்ளார். இதை பின்பற்ற சென்னை, திருச்சி, மதுரை மண்டல தலைமை பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கூடுதல் செலவினம் மற்றும் வேலை இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு நேரடியாக அமைக்கும் சாலைக்கும், பேக்கேஜ் முறைக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஆவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.