வாழப்பாடி
இன்று வாழப்பாடியில் முதல்வர் ஸ்டாலின் வருமுன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
நேற்று சென்னையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, சேலம், தர்மபுரி மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படும் முதல்வர் வாழப்பாடிக்குச் சென்று, வரும்முன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 1,240 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இவற்றில் 16 பிரிவுகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் இடம்பெறுவார்கள் என்றும், மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இந்த புதிய மருத்துவத் திட்டத்தை தொடங்கிவைத்த பிறகு ஆத்தூர் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் திறந்து வைத்து, புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அவர் நவீன தனியார் ஜவ்வரிசி பதப்படுத்தும் ஆலையைத் தொடங்கிவைத்து, ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.