சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 30ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுக (AIADMK) ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் (MR Vijayabhaskar). 2016 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியிடம் தோல்வி அடைந்தார். இவர்மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜூலை 22ந்தேதி காலை முதல் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான கரூரில் 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். . மேலும் ஆர்.ஏ.புரம் சாய்பாபா கோயில் அருகே அமைந்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது, ஏராளமான பணம் மற்றும் நகைகள், ஆவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், வரும் 30ந்தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, லஞ்ச ஒழிப்பு காவல்துறை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.