சென்னை: மாநிலம் முழுவதும விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான 400 வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் மற்றும் மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இணையதளத்தில் அறிவித்து உள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை காவல்துறையினர் மடக்கி, காவல்நிலையங்களில் வைப்பது வழக்கம். பின்னர், வாகன உரிமையாளர்கள், அதற்கான அபராதத்தை செலுத்தியதும், வாகனங்கள் விடுக்கப்படும். ஆனால், விபத்து, கடத்தல் போன்ற செயல்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராததால், அப்படியே கிடந்து துருப்பிடித்து வீணாகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான சுமார் 400 வாகனங்கள் வரும் வாரங்களில் ஏலத்தில் விடப்பட உள்ளதாக வட்டாரப் போக்குவரத்து துறை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை யாரும் உரிமைகோராத நிலையில், அவை ஏலம் விடப்பட உள்ளது. இது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு 3 முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர்கள் வாகனத்தை திரும்பபெறாததால் ஏலம் விடுவதை தவிர வேறு வழியில்லை என வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏலம் விடப்படும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் குறித்து https://tnsta.gov.in/homepage என்ற போக்குவரத்துத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.