nadigar_sangam_2748208f
தேர்தல் காலகட்டத்தில் நாடகக் கலைஞர்கள் நாடகம் நடத்த சிறப்பு அனுமதி தர வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று நடிகர் சங்க நிர்வாகிகள்  கோரிக்கை மனு அளித்தனர்.
நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன், நிர்வாகிகள் மனோபாலா, உதயா உள்ளிட்டோர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இன்று சந்தித்து அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது :-
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் ஆயிரத்துக்கும்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தமிழகம் முழுதும் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படும். அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அந்த காலகட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில் தான் வருடம் முழுவதும் அவர்கள் குடும்பம் நடத்த வேண்டும். ஆகவே நாடகக் கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
கடந்த பொது தேர்தலில் இருந்து தேர்தல் காலங்களில் நாடகம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்த காலகட்டத்தில் மூன்று மாதங்களுக்கு  எங்கள் நாடக கலைஞர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடுகிறது. பள்ளி கல்லூரிகளல் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கட்ட கூட முடியாமல் போகிறது. எனவே. இந்த கால கட்டத்தில் நாடகம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதி வழங்கி உதவிட வேண்டும். தேர்தலுக்காக தாங்கள் விதிக்கும் விதிகளுக்கு கட்டுப்பட்டு நாடக கலைஞர்கள் நடப்பார்கள்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை கொடுத்த பிறகு தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவர் பொன்வண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“நாங்கள் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், நாடக நடிகர்களின் பிரச்சினையை மிக முக்கியமான பிரச்சினையாக அணுகினோம். முதல்வரை சந்திக்கும் போது கூட இப்பிரச்சினையைப் பற்றி பேசினோம். ‘எங்களுடைய அரசாங்கம் நாடக கலைஞர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் உள்ள பிரச்சினை என்பதால் நீங்கள் தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு கோரிக்கை வையுங்கள்’ என்று எங்களுக்கு முதல்வர் வழிகாட்டினார்.
தேர்தல் நேரத்தில் கட்சி சம்பந்தமாக நாடகங்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று நாடக கலைஞர்களிடம் வலியுறுத்துவோம்” என்றார்.