சென்னை: சென்னையில் உள்ள ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் இப்போதைக்கு மூடப்படாது என ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனம் பிரபல கார் நிறுவனமான எம்.ஜி (Morris Garrages – MG) மோட்டார்ஸ் உடன் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் கார்  உற்பத்தி செய்து வருகிறது.  கொரோனா தொற்று காரணமாக எழுந்த பொருளாதார நெருக்கடி மற்றும் கார் விற்பனையில் சரிவு காரணமாக, ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய கிளைகளை மூட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலைகள் மூடப்பட்டால் சுமார் 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக ஃபோர்டு நிறுவன ஆலைகளையும் தொடர்ந்து இயக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில்  கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை மூட உள்ளதாக அறிவித்து உள்ளனர். இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு  உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தினோம். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அவர்கள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளன. அரசின் மூலமாக சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அதையடுத்து,  அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுப்போம்.  இப்போதைக்கு. ஃபோர்டு நிறுவனம் மூடப்படவில்லை, இயங்கி கொண்டுதான் இருக்கின்றது. அடுத்த ஆண்டு நிறுவனம் மூடப்படுவதாக அறிவித்துள்ளதால், அதற்கு முன்பாக அங்கு வேலை செய்பவர்கள் யாரும் வேலை இழப்புக்கு ஆளாகாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில் ஃபோர்டு நிறுவனத்தை வாங்க எம்ஜி கார் நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இரண்டு நிறுவனத்துக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடக்கநிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபோர்டு நிறுவனம்  மகேந்திரா& மகேந்திரா மற்றும் ஓலா நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவ வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.