சென்னை: மத்தியஅரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன.
அதன்படி, இன்று தமிழ்நாட்டின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா , டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி போராட்டம் செய்கின்றனர்.சென்னை சிஐடி காலனி இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.அதேபோல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கக் கோரியும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, விலை வாசி உயர்வை கண்டித்து மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.