திருவண்ணாமலை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தொடர்ந்து 16 ஆம் மாதமாக இந்த மாதமும் திருவண்ணாமலை கிரிவலம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது வழக்கமாகும். இந்த நாளில் மலையைச் சுற்றி உள்ள 14 கிமீ தூரம் உள்ள பாதையை லட்சக் கணக்கான பக்தர்கள் நடந்தே வலம் வருவார்கள். பல பக்தர்கள் இந்த பவுர்ணமி கிரிவலத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டது. அதையொட்டி சென்ற வருடம் ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செய்யத் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது.
எனவே இந்த மாதம் கிரிவலம் செய்ய அனுமதி கிடைக்கும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆயினும் கொரோனா பரவல் முழுவதுமாக குறையாததால் மாவட்ட நிர்வாகம் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செய்யத் தடை விதித்துள்ளது. தொடர்ந்து 16 மாதமாகத் தடை விதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.