சென்னை: நிதிநிலை அறிவிப்புகளை 6 மாதத்திற்குள் செயல்படுத்திட வேண்டும் என துறைச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் அவர்களது துறை சம்பந்தப்பட்ட மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் உரையாற்றிய முதல்வர் “நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துவிட்டோம். அறிவிப்புகளை 6 மாதத்திற்குள் செயல்படுத்திட வேண்டும்” என்றும், “மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அறிவிப்புகளை செயல்படுத்தும்போது வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.
சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை நானே நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்னேன். அமைச்சர்களை மட்டுமல்ல ஒவ்வொரு துறை செயலாளர்களையும் நேரடியாக கண்காணிப்பேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசின் புதிய திட்டங்கள், தகவல்கள் அனைத்தும் அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். இணையதளத்தின் ஆன்லைன் தகவல் பலகை எனப்படும் டேஷ்போர்டில் தினந்தோறும் அதுகுறித்த தகவல்கள் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்த கால அளவை நிர்ணயித்து அதற்குள் செயல்படுத்துங்கள்.
திட்டங்களின் நிலையை வாரந்தோறும் ஆய்வு செய்வேன். அனைத்து துறையும் ஒருசேர முன்னேற்றம் கொள்ள வேண்டும். அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, திட்டங்கள் காலதாமதம் ஆகாமல் செயல்பட முடியும்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையின் செயலர்கள், வேறு துறை சார்ந்த பணிகளையும், மக்கள் பணிகள், அரசின் பணிகள் என எண்ணி செயல்பட வேண்டும்.
இதன் மூலம் திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்று சேர வேண்டும். ஒவ்வொரு துறையும் முன்னேற வேண்டும். திட்டங்கள் மூலம் அனைத்து மாவட்ட மக்கள் மற்றும் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார்.