சென்னை: அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
ஏற்கனேவே அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தற்போது வேலைவாய்ப்புக்கு காத்திருப்போரின் வயதையும் 2 ஆண்டு உயர்த்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தின் கடைசிநாள் அமர்வான செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற 2021-22-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 30ல் லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் பட்டிலினத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும் எனவும் கூறியுள்ளது.