சென்னை: டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்து உள்ளது.

மத்தியஅரசு, புற்றீசல் போல அதிகரித்து வரும் டிஜிட்டல் ஊடங்களை முறைப்படுத்தும் வகையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கடந்த பிப்ரவரி மாதம்  கொண்டுவந்தது. இந்த முறை சமூக ஊடகங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிராக இருக்கும் தகவல்களை தடுப்பற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இதற்கு ஊடகத்துறையினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  படைப்பாளிகளின் மற்றும் எழுத்தாளர்களின் சுதந்திரத்துக்கு எதிராக கூறி, கர்நாடக இசை கலைஞர் டிஎம் கிருஷ்ணா, டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த விசாரணையைத் தொடர்ந்து,  மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில்  நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாக்கும் வகையில் தான் இந்த புதிய விதிகள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிப்பு மூலம் கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல். இவ்வாறு கண்காணித்தால் ஜனநாயகத்தின் 4வது தூண் இல்லாமல் போய்விடும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காவிட்டால், அக்டோபர் இறுதியில் வழக்கை விசாரிக்கிறோம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.