சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இதுதொடர்பாக திமுக, அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடு முழுவதும்  மருத்துவம் படிப்பதற்கு நீட் நுழைவு தேர்வு மத்தியஅரசு மூலம் 2017ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு உள்ளது. இருந்தாலும், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தேர்தலின்போது திமுக, தமிழ்நாட்டில் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறியது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு பயத்தால், கடந்த  2017ஆம் ஆண்டு அனிதாவில் தொடங்கி நடப்பாண்டு இறந்த தனுஷ்வரை மொத்தம் 14 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்வதற்கும், கருத்து கேட்பதற்கும் குழு ஒன்றையும் அமைத்தது. அந்தக் குழுவும் நீட் தேர்வால தமிழ்நாட்டு பாதிப்பு என அறிக்கை தாக்கல் செய்தது. இதைக்கொண்டு, நீட் தேர்வுக்கு எதிராக  மசோதாவை சட்டப்பேரவையில்முதல்வர் மு.க. தாக்கல் செய்தார்.

முன்னதாக நீட் தேர்வு தொடர்பாக  முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், தொடக்கம் முதலே நீட் நுழைவுத்தேர்வை திமுக எதிர்த்து வருகிறது. அனிதா முதல் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட போது மரண அமைதியில் இருந்தது அதிமுக ஆட்சிதான். நீட் தேர்வை எதிர்ப்பதற்கான தெம்பும், திராணியும் அதிமுக அரசுக்கு இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில்தான் நீட் தற்கொலைகள் நிகழ்ந்தன. மாணவர் தனுஷின் தற்கொலைக்கும் அதிமுகதான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக – அதிமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து,  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.