டில்லி

ச்சநீதிமன்ற கண்டிப்பையொட்டி  மத்திய அரசு தீர்ப்பாயங்களுக்கு ஊழியர்களை நியமித்துள்ளது.

நாடெங்கும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பலமுறை அவகாசம் தந்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையொட்டி கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு மதிப்பதே இல்லை,. எங்கள் உத்தரவுகள் எதையும் நிறைவேற்றுவதும் இல்லை’ என கடுமையாகக் கடிந்து கொண்டார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது,  இந்நிலையில், கம்பெனிகள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) மற்றும் வருமான வரி தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் வருமான வரி மேல்முறையீடு தீர்ப்பாயம் (ஐடிஏடி) ஆகியவற்றில் காலியாக இருந்த பணியிடங்களை மத்திய அரசு நேற்று நிரப்பியது.

இத்தீர்ப்பாயங்களில் சட்ட விவகாரம், தொழில்நுட்ப பிரிவு மற்றும் அக்கவுண்டன்ட் பணியாளர்கள் என 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய  அரசு கூறி உள்ளது. மேலும் என்சிஎல்டி சட்ட பிரிவில் நியமிக்கப்பட்ட 8 பேரில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராமதிலகமும், சேலம் மாவட்ட நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.