நாராயணவனம் கல்யாண வேங்கடேசர்
ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்குப் போகும் சாலையில் நகரியிலிருந்து சுமார் 15. km. தூரத்தில் உள்ள திருத்தலம் இது. நாராயணவனக் கோவில் கோபுரம் வெகு தூரத்திலிருந்தே நம் கண்ணைக் கவர்கிறது. அழகான உயரமான கோபுரம் அமைந்த பெரிய கோவில், இந்த இடம் தான் ஸ்ரீ வேங்கடேசப் பெருமானுக்குக் கல்யாணம் நிகழ்ந்த பகுதியாகும். இந்த ஊரில் ஆகாச ராஜன் புத்திரியாகத் தோன்றிய பத்மாவதி தேவியை, ஸ்ரீநிவாசராகப் பெருமாள் திருமணம் புரிந்ததாகப் புராண வரலாறு கூறுகிறது.
இந்த வனத்தில் தான் ஸ்ரீநிவாசரைத் தன் தோழியருடன் பத்மாவதி தேவியார் பார்த்து மையல் கொண்டார் என்று புராணம் சுவைப்பட இயம்புகின்றது. எழிலோடு கூடிய திருமேனியராக மூலவர் ஸ்ரீ கல்யாண வேங்கடேசர் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளிக்கிறார். அவரது புன்னகை வதனத்தில் சிறிது சிந்தனையும் உள்ளது போல் தோன்றுகிறது. கல்யாணக் கவலை போலும்!
திருமார்பில் மஹாலக்ஷ்மித் தாயார் எழுந்தருளியுள்ளார். கல்யாண மாப்பிள்ளை ஆதலால் கையில் கங்கணம் அணிந்து கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். தசாவதார ஒட்டியாணம் அவர் அழகுக்கு அழகு செய்கிறது. வேட்டையாடச் சென்று பெண்மானான பத்மாவதியை வேட்டையாடியதால் கையில் கத்தியுடன் காணப்படுகிறார். உற்சவர் கல்யாண ஸ்ரீநிவாஸா என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேதராக உள்ளார்.
போக ஸ்ரீநிவாசரும் ஸந்நிதியில் அழகாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் திருவடி தரிசனம் நம் மனதை விட்டு என்றுமே அகலாது. பெருமாளுக்குப் புஷ்ப மாலைகள் சாற்றிருக்கும் விதம் நேர்த்தியாக உள்ளது. புஷ்பங்களைக் கண்மைக் கவரும் வண்ணக்கலவை மிளிரும் வண்ணம் தொடுத்து பகவானுக்கு அர்ப்பணித்து உள்ளது மிகவும் அற்புதம். தனி ஸந்நிதியில் பத்மாவதித் தாயார் கம்பீரமாக வீற்றிருந்த கோலத்தில் மூவராகக் காட்சி அளிக்கிறார். இது அவருடைய பிறந்தகம் அல்லவா. எழிற்பொங்க நம்மை வசீகரிக்கிறார்
உற்சவர் பத்மாவதித் தாயார். அமர்ந்த கோலத்தில் தாயார் மஞ்சள் சரடுகள் அணிந்து காட்சி அளிப்பது மிகவும் அழகாக உள்ளது. விளம்பி வருஷம், வைகாசி மாதம், உத்திர நக்ஷத்ரம் அன்று திருமணம் நிகழ்ந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. தீர்த்தம் பரம தீர்த்தம் எனப்படுகிறது.
திருச்சானூரில் எழுந்தருளி இருப்பவர் மஹாலக்ஷ்மியாகிய அலர்மேல் மங்கை என்றும், இக்குறையும் தாயார் தான் பத்மாவதி என்றும் இந்தப் பகுதியிலுள்ளோர் பெருமிதமாகக் கூறிக்கொள்கிறார்கள்.
தாயார் ஸந்நிதிக்கு வெளியில் பத்மாவதி திருக்கல்யாண வைபவத்திற்கு மஞ்சள் அரைத்த இயந்திரம் இன்னும் காணப்படுகிறது. அந்த விபரத்தை நமக்குப் புரியும் வண்ணம் தமிழில் எழுதிவைத்துள்ள கோவில் நிர்வாகத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பிராகாரத்தில் தனி ஸந்நிதி கொண்டு ஆண்டாள் நாச்சியாரும் எழுந்தருளியுள்ளார்.
வேங்கடமா மலையில், ஏகாந்தமாக ஸேவை சாதிக்கும் ஸ்ரீநிவாசர் இங்குக் கல்யாண வேங்கடேசப் பெருமாளாகக் காட்சி அளிப்பதால் இவ்வூருக்கும், இந்த ஊரின் பெருமாளுக்கும் ஏற்றம் அதிகம். பிராட்டியோடு சேர்த்து ஸேவை சாதிக்கும் இந்தக் கல்யாண வேங்கடேசரைக் காண இப்போது நிறைய சேவார்த்திகள் வருவது மனதிற்கு நிம்மதியாக உள்ளது.
திருமலை போன்றே தரிசன கால அட்டவணை இங்கும் உள்ளது. காலை 7 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணிவரையிலும் இக்கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோவில்,