கோபன்ஹேகன்
இஸ்ரேலிய நாட்டு மொபைல் ஒட்டுக் கேட்பு பெகாசஸ் மென்பொருளை ஜெர்மன் நாட்டுக் காவல்துறை ரகசியமாக வாங்கியதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
இஸ்ரேலிய நாட்டு நிறுவனமான எச் எஸ் ஓ நிறுவனம் இந்த மென்பொருளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருள் காவல்துறையினர் மற்றும் புலனாய்வுத் துறையினருக்குக் கண்காணிப்பு பணிகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மென்பொருள் மூலம் எவ்வித ஆண்டிராய்ட் போன்களில் இருந்து பேசப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய முடியும். மேலும் ரகசியமாக அனுப்பப்படும் தகவல்களையும் பெற முடியும்.
இந்திய அரசு இஸ்ரேலிய நாட்டு பெகாசஸ் மென்பொருள் மூலம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரது மொபைல் போன்களை ஒட்டுக் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் நாடெங்கும் கடும் அதிர்வு அலைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் இது குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து அதை மத்திய அர்சு நிராகரித்தது. இதனால் ஏற்பட்ட அமளியில் நாடாளுமன்ற கூட்டம் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த மென்பொருளை தங்கள் நாட்டுக் காவல்துறை ரகசியமாக வாங்கியதை ஜெர்மன் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை ஜெர்மன் நாட்டு செய்தி ஊடகம் ”டை ஸீட்” உறுதி செய்துள்ளது. இந்த ஊடக செய்தியின்படி இந்த மென்பொருள் மிகவும் ரகசியமாக ஜெர்மன் காவல்துறையினரால் வாங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் ஜெர்மனியில் இந்த மென்பொருளில் சில நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜெர்மனி நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது ஒரு பயங்கரமான சட்ட விரோத நிகழ்வு எனவும் இது குறித்து ஜெர்மன் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார் அரசு இந்த மென்பொருள் கொள்முதலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜெர்மனி நாட்டின் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஃபிராங்க் ஒபெரால், “இதன் மூலம் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டனரா என்பதை அரசு தெளிவு படுத்த வெண்டும். மேலும் பத்திரிகையாளர்களின் தகவல்கள் பத்திரமாக இருப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது ஜெர்மன் காவல்துறையின் சகிக்க முடியாத நடவடிக்கை ஆகும். இது குறித்து உள்துறை அமைச்சர் ஹோர்ஸ்ட் தீவிர விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.