சென்னை: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும்,  கடைகள் அடைத்தபிறகு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று  காவல்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. அப்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவரான,  ஈஸ்வரன், மதுக்கடைகள் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த காலங்களைப் போல் இல்லாமல் கழக ஆட்சியில் பொதுமக்களை பாதுகாக்கும் கூடிய வகையில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மூலம் மதுபானப்பான கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களை விட ஒரு நிமிடம் கூட கூடுதலாக மது விற்பனை செய்யக்கூடாது, கடையை அடைத்த பின்பு பார்களில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது  என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதைமீறி எந்த இடத்திலும் மது விற்பனை செய்யதால், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், பூட்டப்பட்ட பிறகு மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதுபோல,  உளுந்தூர்பேட்டையில் விவசாயிகள் மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பதாக சட்டப்பேரவையில்  உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழகத்தில் 4 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக  கூறியதுடன், ஓராண்டில்  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில்  தொடங்கி வைப்பார் என தெரிவித்தார். அதில்  உளுந்தூர்பேட்டையில் உள்ள 4ஆயிரத்து 554 விவசாயிகளும் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.