சென்னை:  மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை நடத்துபவர்கள் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் என  அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார். மேலும், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும் பரப்பும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழன் இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய,  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுமக்கள், ஆறு குளங்களில்,  நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக  தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில்,  அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது. அதன்படி, 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இதையடுத்து,  மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள், தங்களின் தொழில் நிமித்தமாக மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்தமாநில அரசு, அவர்களின் வாழ்வாதாரத்திற்காக  புதிய முடிவு எடுத்திருக்கிறது.

அதன்படி, இனிமேல், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செம்மொழியில் தமிழை தவிர வேறு எந்த மொழி உயிரோடு இருக்கிறது? நமது ஊரின் பெருமை நமக்கு தெரியவில்லை. பானை ஓடுகளும், அதில் உள்ள எழுத்துக்களும் நம்மளை காப்பாற்றுகிறது. இன்றைக்கு இருப்போம், நாளைக்கு ஆட்சி போகும். ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும் பரப்பும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழன் இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் தமிழின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.