நாரில்ஸ்க், ரஷ்யா

ஷ்யாவில் ஒரு நிகழ்வில் மலையில் இருந்து தவறி விழுந்த காமிராமேனை காப்பாற்ற முயன்ற அமைச்சர் உயிர் இழந்துள்ளார்.

ரஷ்ய நாட்டில் அமைச்சராகப் பதவி வகிப்பவர் எவ்ஹெனி ஜெனிசேல் ஆவார். இவரது தலைமையில் ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள நாரிஸ்க் என்னும் நகரில் ஒரு பயிற்சி முகாம் நடைபெற்றது.  சுமார் 6000 பேருக்கு மேல் பங்கு பெற்ற இந்நிகழ்வை பல்வேறு ஊடகங்களும் செய்திகளாக வெளியிட்டு வந்தன.  இவ்வாறு செய்தி சேகரிக்கச் சென்ற ஒரு காமிராமேன் அமைச்சருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது காமிராமேன் மலை உச்சியில் இருந்து தவறி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார்.   இது குறித்து மற்றவர்கள் கவனிப்பதற்குள் அமைச்சர் ஜெனிசேவ் மலை உச்சியில் இருந்து குதித்து காமிராமேனை காப்பாற்ற முயன்றுள்ளார்.  அவர் குதிக்கும் போது அங்கே வெளியே நீட்டிக்கொண்டிருந்த பாறையில் அமைச்சர் தலை மோதி உள்ளது.   இதனால் அவர் உயிர் இழந்துள்ளார்.

ஜெனிசேவ் ஏற்கனவே ரஷ்ய அரசில் பல உயர் பதவிகளை வகித்தவர் ஆவார்.  தவிர ரஷ்ய பாதுகாப்புக் குழு உறுப்பினரும் ஆவார்.  இவர் ரஷ்ய அதிபர் புதினின் விசுவாசிகளில் ஒருவர் ஆவார்.  ஜெனிசேவ் மறைவு ரஷ்ய நாட்டில் கடும் அதிர்ச்சியையும் மக்களிடையே மிகுந்த சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது.