சென்னை
இணையம் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளர்ர்காக சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். இதையொட்டி இணையம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யலாம், எனவும் சிலர் ஆலோசனை தெரிவித்தனர்.
நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து, “தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. கள்ள மது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்கள் வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக ரூ.5 கோடி மானியமாக மறுவாழ்வு நிதி வழங்கப்படும்.
தவிர மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படும்.
டாஸ்மாக் கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள், 3,158 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம்25,009 சில்லறை விற்பனை பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாகக் கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.15.01 கோடி நிதி கூடுதலாகச் செலவாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.