சென்னை: விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பாஜக உள்பட இந்து அமைப்புகளும் விநாயகர் சதுர்த்திக்கான தடையை விலக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் இதுகுறித்துபேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் 12 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலையை தயாரிக்கும் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் நிவாரணத்தொகை என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மொட்டை போடும் பணியாளர்கள் தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கோவி செழியன் மற்றும் நந்தகுமார் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அதில் பேசிய உறுப்பினர் நந்தகுமார், மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தின் மூலம் அதனை நம்பியிருந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாகவும் அந்த தகவல் உண்மையா? ஆம் எனில் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டத்தால் பக்தர்களின் உள்ளம் நெகிழ்ந்திருப்பதாக பேசினார். பொதுவாக பக்தர்களுக்கு மொட்டை அடிப்பதற்கு ஐநூறு ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதாகவும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் உயிரையே காணிக்கையாக செலுத்துவது போல தாங்கள் வளர்த்த முடியை காணிக்கையாக செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

திருக்கோயில்களில் மொட்டைக்கு இனி இல்லை கட்டணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பணியில் ஈடுபட்டுள்ள 1749 பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.