சென்னை: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைக்காகவே விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில், ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. வரும் 13-ம் தேதியுடன் சட்டப்பேரவை நிறைவடைய உள்ளது.
இன்று செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. முன்னதாக சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். விநாயகர் சதுர்த்திக்கான கட்டுப்பாடுகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கேரளாவில் ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது அளிக்கப்பட்ட தளர்வுகளால் அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை கருத்தில் கொண்டே தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.