திருவனந்தபுரம்
நிபா வைரஸ் தாக்குதலால் ஒரு கேரள சிறுவன் உயிர் இழந்துள்ள நிலையில் மேலும் 7 பேருக்குப் பாதிப்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
கொரோனா தினசரி பாதிப்பில் கேரள மாநிலம் கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் உள்ளது. கேரள மாநிலத்தில் நேற்று 19,688 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 42,27,526 ஆகி உள்ளது. இதில் நேற்று 135 பேர் உயிர் இழந்து மொத்தம் 21,631 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 28,561 பேர் குணமடைந்து மொத்தம் 39,66,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,38,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு நிபா வைரஸ் பதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்குதல் பழம் தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. கடந்த 4 நாட்களாகக் கேரளாவில் ஒரு 12 வயது சிறுவனுக்கு அதிக அளவு காய்ச்சல் இருந்துள்ளது. சிறுவனின் உடலில் இருந்து ரத்தம், எச்சில் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனே வைராலஜி மையத்தில் சோதனை நடத்தியதில் சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டது. நேற்று அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளான்.
சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி ஆனதில் இருந்து அவனுடன் 10 நாட்களாகத் தொடர்பில் இருந்தோர் அனைவரும் தேடப்பட்டு வருகின்றனர். இவர்களைத் தனிமைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அத்துடன் கேரளாவில் மேலும் 7 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களது ரத்த மாதிரிகள் சோதனைக்கு புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அனேகமாக இன்று மாலை இந்த சோதனை முடிவுகள் தெரிய வரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.