கோவை: கோவை மாவட்டத்தில்  யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை; அதுதொடர்பாக வெளியான தகவல் தவறு என மாவட்ட கலெக்டர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு சிறுவன் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் சிலருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் செலுத்தி வருகின்றன.

இந்த  நிபா வைரஸ் காற்று மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வவ்வால் மூலமும், மிருகங்கள் வாயிலாகவும், குறிப்பாக பன்றி மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பறவைகள் கடித்துபோட்ட பழங்களை உண்ண வேண்டாம் எனவும் சுகாதார துறையினர் எச்சரித்து உள்ளனர்.

இதற்கிடையில் கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதாக செய்தி வெளியாகின.  கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக, நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றும்,  அதிக காய்ச்சல் உள்ள அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் சரியான முறையில் பரிசோதிக்கப்படுவார்கள்  என கோவை மாவட்ட கலெக்டர் ஜிஎஸ் சமீரன் கூறியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால், இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் மறுப்பு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியான வாளையார் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், கேரளாவில் இருந்து பவர்களிடம் சோதனை நடத்த உத்தரவிட்டு உள்ளதாக கூறியதுடன், கோவையில் யாருக்கு நிபா அறிகுறிகள் இல்லை. அதுதொடர்பாக வெளியான செய்தி தவறானது என்றுமறுப்பு தெரிவித்து உள்ளார்.