சென்னை: பெரும் கடைகள், மால்கள், பெரு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கேரளாவில், இதுபோன்ற மசோதா கொண்டு வரப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசும் மசோதா கொண்டு வந்துள்ளது.
பெரும்பாலான கடைகள், மால்கள், பெருநிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்கள், பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே பணியாற்றி, நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அவர்கள் கால் வலியுடன் நின்றுகொண்டே பணியாற்றும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு இருக்கை வசதியை கட்டாயமாக்கும் மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது துறைகள் சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை. தொழிலாளர் நலத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தொடரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்து உரையாற்றி னார். அதில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் வேலைநேரம் முழுவதும் நிற்க வைக்கப்படுவதன் விளைவாக பல்வகையான உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியமென கருதுவதாகவும், இதற்கு வழிவகுக்கும் வகையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை திருத்தம் செய்ய, சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 1947 ஆம் ஆண்டே தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த சட்ட முன்வடிவம் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என அமைச்சர் அறிவித்தார்.