சென்னை: தமிழ்நாடு செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்துள்ள நிலையில், மாணாக்கர்களின் வருகை குறைவாகவே காணப்படுகிறது. இதையடுத்து, அரசு பள்ளியில் மாணவர் வருகை குறைவு குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில், 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் என, 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில், 90 ஆயிரம் மாணவ – மாணவியர் படித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் இழந்த பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், ஏராளமான மாணவர்களும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அதே வேளையில், தனியார் பள்ளிகள் கேட்கும் கட்டணத்தை கட்ட முடியாததால், ஏராளமானோர் அரசு பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். அதனால், இந்த ஆண்டு அரசு பள்ளிகிளில் மாணவர் சேர்க்க வெகுவாக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு, செப்டம்பர் 1ந்தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், பள்ளிகளுக்கு வரும் மாணாக்கர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அதிக பட்சமாக 70 சதவிகிதம் வரை மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளதாகவும், வடசென்னையின் சில பள்ளிகளில் ஒன்றைப்படை எண்ணிக்கையிலேயே மாணாக்கர்கள் பள்ளிக்க்கு வந்துள்ளதாகவும்,பல பெற்றோர்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருவதும் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி தகவலின்படி, சென்னையில் மட்டும் உயர் வகுப்புகளுக்காக 70பள்ளிகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பள்ளிகளில், 27 ஆயிரத்து 340 மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் வரத்து குறைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் நாளில் 30 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்பதால், ஆசிரியர்கள் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மாணவர்களை பள்ளிக்கு வர ஆசிரியர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். மாணாக்கர்களின் பெற்றோரிகளிடமும் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தி வருகின்றனர்.
இநத் நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட கல்வித்துறை உயர் அதிகாரிகள் சில மாநகராட்சி பள்ளிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். மாணவர்கள் வருகை, பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ததுடன் பள்ளி மாணாக்கர்களிடம் கலந்துரையாடினர்.
மேலும் பள்ளிகளுக்கு முழுமையான அளவில் மாணவர்களை வரவழைக்கும்படி பள்ளி தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.