சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில், ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் உரிமை என்று கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இநத நிலையில், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தமிழில் அர்ச்சனை செய்ய சட்ட உரிமை உள்ளதா என இந்து அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து இருந்த இந்து அறநிலையத்துறை கமிஷனர், தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் திட்டம் இல்லை. இத்திட்டம் 1974இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1996இல் புத்துயிர் பெற்றது . இது சம்பந்தமாக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆகம ரீதியான அர்ச்சனைகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோருக்கு அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
இந் தநிலையில், தமிழில் அர்ச்சனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் வாதங்களைத் தொடர்ந்து, எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. அதனால், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையுமில்லை. இதற்கு சான்றாக என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன எ என்று கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.