நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவிக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த 10ம் வகுப்பு மாணவ மாணவி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மாணவியுடன் தொடர்பிலிருந்து அனைத்து மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மாணவி பயின்ற வகுப்பறையும் மூடப்பட்டுள்ளதுடன், கிருமி நாசினி கொண்டு வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணவிக்கு லேசான தொற்று அறிகுறியே இருந்ததால், வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.