சென்னை: தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். அவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் மா.சு.110 அறிவிப்புகளை அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக கோரிக்கைகள் தொடர்பாக இன்று மதியம் 2 மணிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் மன்சுக் மான்ட்வியாவை சந்தித்து பேசி இருப்பதாக கூறினார்.
இந்த சந்திப்பின்போது, 11 புதிய மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கப்பட வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், நீட் தேர்வுவிலக்கு அளிக்கப்பட வேண்டும் உள்பட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் குறித்து மனு வழங்கி, அதை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தார்.