சித்தர்கள் 12000 ஆண்டுகளாய் வணங்கும் அதிசய பைரவர் சிலை – சுகந்தவனேஸ்வரர் திருத்தலம்.!
சிவகங்கை மாவட்டம் பெரிச்சி கோயில் பகுதியில் சுகந்தவணேஸ்வரர் கோயில் உள்ளது . இத்தலத்தில் உள்ள இரட்டை முக பைரவர் நவபாஷாணத்தால் ஆனவர் . இவர் பல ஆயிரம் ஆண்டு பழமையானவர் . பழனி முருகன் கோயிலை நவபாஷாணத்தால் வடிக்கும் முன்பே இந்த பைரவர் சிலை நவபாஷாணத்தால் உருவானது.
இந்த சிலை சித்தர்கள் 12000 ஆண்டுகளாக வணங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. எட்டு கைகளுடன் ஆயுதம் ஏந்தி கபால மாலையுடன் இருக்கும் இவருக்கு பௌர்ணமி நாட்களில் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.
இந்த நவபாஷாண சிலை அதீத சக்தி வாய்ந்த சிலையாகும். இந்த சிலையின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை என்பதால் இந்த சிலையின் மீது ஊற்றப்படும் அபிஷேகங்கள் பிரசாதமாகத் தருவதில்லை . இவருக்கு அணிவிக்கப்படும் வட மாலை கூட பக்தர்களுக்குத் தரப்படுவதில்லை . இந்த வடமலையைச் சன்னிதி மேல் தூக்கிப் போட்டு விடுகிறார்கள்.
அதிசயத் தக்க விதத்தில் இதைப் பறவைகள் தீண்டுவதில்லை . அபிஷேக தீர்த்த நீரும் வெளியே சென்று விடுமாறு அமைக்கப்பட்டிருக்கிறது .
இங்குச் சனி பகவான் வடகிழக்கு மூலையான சனி மூலையில் தனியாகக் காட்சி தருகிறார் . வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் இவர் பைரவரைத் தரிசித்தவாறு இருக்கிறார் . சனீஸ்வரனின் வாத நோயைப் பைரவர் குணப் படுத்தியதால் பைரவர் சனீஸ்வரரின் குருவாகிறார் .
பைரவரின் நட்சத்திரம் பரணி நட்சத்திரம் ஆகும் பரணியில் பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபடுவது சிறப்பு . தொடர்ந்து ஆறு பரணி நாட்களில் ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவரான சுகந்தவனேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது பிணிகளைப் போக்கும் . ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.
பைரவர் பயத்தைப் போக்கக் கூடியவர் . எப்பேர்ப்பட்ட தீராத தோஷங்களும் பைரவ வழிபாட்டால் தீர்த்து விடும். ஓம் க்ரீம் மஹா பைர வாய நமஹ என்கிற மந்திரத்தை ஒரு சனிக்கிழமையில் 108 முறை சொல்லி பைரவ வழிபாட்டைத் தொடங்கலாம் . சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்த கோயில் அமைந்துள்ளது.