பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் புகார் கொடுத்ததன் பெயரில், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் . ராஜ் குந்த்ரா தங்களை மிரட்டி நிர்வாணப்படுத்தி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா (45 ), பெண்களை வைத்து ஆபாச படங்களை உருவாக்கி… அதனை அவரது செயலியில் வெளியிட்டு வந்துள்ளார். இது குறித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இவர் மீது, ஐபிசி பிரிவுகள் 420 (மோசடி), 34 (பொது நோக்கம்), 292 மற்றும் 293 (ஆபாசமான மற்றும் அநாகரீகமான விளம்பரங்கள் மற்றும் காட்சிகள் வெளியிட்டது), மற்றும் ஐடி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் பெண்களின் அநாகரிக பிரதிநிதித்துவம் (தடை) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களாக ஆபாச படங்கள் தயாரிப்பில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு நாளைக்கு 2 முதல் 3 லட்சம் வரை வருமானம் கிடைத்ததாகவும், அதன் பின்னர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 லட்சம் வரையிலும் ராஜ் குந்த்ரா சம்பாதித்ததாகவும் தெரியவந்திருக்கிறது. ராஜ் குந்த்ராவின் பல்வேறு வங்கி கணக்கில் உள்ள 7.5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.
ஆபாச படங்களை இந்தியாவிலிருந்து அப்லோட் செய்ய முடியாது என்பதால் லண்டனில் இருக்கும் அவருடைய மைத்துனர் பிரதீப் பக்ஷி என்பவரின் கென்ரின் நிறுவனம் மூலமாக வீடியோக்களை அப்லோட் செய்திருக்கின்றனர். இந்தியாவிலிருந்து வீ- ட்ரான்ஸ்ஃபர் வாயிலாக லண்டனுக்கு அனுப்பியுள்ளனர். Hotshot என்ற செயலியில் பணம் செலுத்தி இந்த வீடியோக்களை பார்க்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த செயலி ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலும் கிடைத்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜ்குந்த்ராவை விட்டு ஷில்பா ஷெட்டி பிரியவிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.