சென்னை: இரண்டு மாடிக்கும் மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு லிப்ட் வசதி கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில்  மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று (செப்டம்பர் 1ந்தேதி)  2021 – 2022 ஆம் ஆண்டிற்கான  வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொடர்பான மானியக் கோரிக்கைகள்  விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய கூட்டத்தில், சட்டமன்றத்தில் இன்று 2021ம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்ட முன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, வீட்டு வசதித் துறை & நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் & மகளிர் உரிமைத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக்குறிப்பில்,  தமிழகத்தில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் மின்தூக்கி (லிப்ட்)  உள்ளிட்ட வசதிகள்  செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் லிஃப்ட், சாய்தள மேடை , சிறப்பு கழிப்பறை கட்ட வேண்டும்.  அதேபோன்று பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் லிஃப்ட் கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.