சென்னை: பா.ஜ.க. மூத்த நிர்வாகியும், முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவருமான இல.கணேசன், மணிப்பூர் மாநில கவர்னராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நாளை மணிப்பூர் மாநில ஆளுநராக பதவி ஏற்கிறார்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான இல.கணேசனை மத்திய பாஜக அரசு மணிப்பூர் மாநில கவர்னராக நியமனம் செய்துள்ளது. இதற்கான ஆணையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பிரதமர் உள்பட தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இல.கணேசன் காஞ்சீபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள மகாபெரியவர் சுவாமிகள் மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை  சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு சங்கர மடம் சார்பில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் செய்தியளார்களிடம் பேசியபோது,  வருகிற 27-ந்தேதி மணிப்பூரில் ஆளுநராக பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளேன். இதற்காக 26-ந்தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறேன் என்றார்.

அரசாங்க பணியில் இருந்து ராஜினாமா செய்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் முழு நேரமும் பணிபுரிந்த எனக்கு, ஒரு அங்கீகாரம் தரும் வகையில் இந்த பொறுப்பு கிடைத்து இருப்பதாக நான் கருதுகின்றேன்.  52 ஆண்டுகளாக கட்சியின் சாதாரண தொண்டனாக பணியாற்றினேன். அதற்கு கிடைத்த வெகுமதிதான் ஆளுநர் பொறுப்பு என்றார்.