சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி  தொடர்ந்த வழக்கில்,  எடப்பாடி, ஓ.பி.எஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, விசாரணைக்கு  நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக,  கட்சியிலிருந்து நீக்கி கடந்த  ஜூன் 14ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இதை எதிர்த்து, புகழேந்தி தரப்பில் எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கப்பட்டது. அவரது மனுவில்,  தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ்  இன்று ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் தரப்பில், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது ஓபிஎஸ், இபிஎஸ் மனுவை நிராகரித்த நீதிபதி, சம்மன் அனுப்பி முதல் முறை ஆஜராக விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி, அந்த மனுக்களை நிராகரித்ததுடன், செப்டம்பர் 14ஆம் தேதி இருவரும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.