டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து,  நாடாளுமன்ற அனைத்து  கட்சிகளின் தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பயங்கரவாத அமைப்பான தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும், ஆப்கன் விமான நிலையம், அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கனில் சிக்கியுள்ள பல்வேறு நாட்டவர்களை, அங்கிருந்து தங்களது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல உலக நாடுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி அழைத்து வருகிறது.

அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சில விமானங்களில் இந்தியர்கள் அழைத்து வருப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் பத்திரமாக மீட்கும்  வகையில், மேலும், ஆப்கனில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டுள்ள அமெரிக்காவிடம் பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளது.

இந்த நிலையில்,  ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் அவைத் தலைவர்களிடம், பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆகஸ்டு  26ந்தேதி எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டமானது ஆகஸ்ட் 26ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு  செய்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.