ஸ்ரீநகர்

காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் ஸ்டேட் வங்கி ஒரு படகில் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏ டி எம் திறந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல சுற்றுலாத்தலங்கள் அமைந்துள்ளன.  இதில் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி மிகவும் பிரபலமானதாகும்.  இது ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து போகும் ஒரு அழகிய இடமாகும்.

குறிப்பாக இங்குள்ள  படகு வீட்டில் சவாரி செய்வதில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   கடந்த 16 ஆம் தேதி அன்று இந்த ஏரியில் மிதக்கும் ஏ டி எம் ஒன்றை ஸ்டேட் வங்கி அமைத்துள்ளது.   சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்காக ஒரு படகில் ஏ டி எம் அமைந்துள்ளது.

ஸ்டேட் வங்கியின் இந்த மிதக்கும் ஏ டி எம் ஸ்ரீநகர் மக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் புதுமையாக உள்ளது.   ஆனால் ஸ்டேட் வங்கிக்கு இது புதியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் ஏற்கனவே ஒரு படகில் ஸ்டேட் வங்கி ஏ டி எம் அமைத்து சாதனை படைத்துள்ளது.