சென்னை:
கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு ரூ. 1,59,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வடசென்னை அனல் மின் நிலையத்திலுள்ள நிலக்கரி கிடங்குகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியத்திற்கு 1,59,000 கோடி ரூபாய்க் கடன் ஏற்பட்டுள்ளது என்றும், வடசென்னை அனல் மின்நிலையத்தில் 85 கோடி ரூபாய் மதிப்பிலான 2.38 இலட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி மின்சாரத்துறையில் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றும், ‘மடியில் கனமில்லை, அதனால் எதற்கும் பயமில்லை’ என்றும் தெரிவித்தார்.