சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ஏராளமான புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில், தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றத்தில் உத்தரவிட்டு உள்ளது.
சேலம் செல்லியம்பாளையம் கூட்டுறவு சங்க உறுப்பினர் குணசேகர் என்பவர், தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனக் கணித்து, கூட்டுறவு சங்கத் தலைவர், 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜனவரி வரை போலிப் பெயர்களில் பலருக்குப் பயிர்க் கடன்களை வழங்கியதன் மூலம் சங்கத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் நல்லெண்ணத்தில் அரசு பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ததைக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஜூன் முதல் 2021 பிப்ரவரி வரை செல்லியம்பாளையம் கூட்டுறவு சங்கம் வழங்கிய பயிர்க் கடன் குறித்து விசாரிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு குறித்து பதில் அளிக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், வழக்கை செப்.1-க்கு ஒத்தி வைத்தது.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், முன்னாள் அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பயிர்க்கடனிலும் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கடந்த ஜூன் 23, 2021 அன்று நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
அதன்படி, கடந்த ஜனவரி 31-ம் தேதி விவசாயிகளுக்கு ரூ.12,100 கோடி அளவுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் மட்டுமல்லாமல், பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் பெயரில் முறைகேடுகள் நடத்துள்ளன. 136 சங்கங்களில் ரூ.203 கோடி அளவுக்கும், 229 சங்கங்களில் ரூ.108 கோடி அளவுக்கும், 155 சங்கங்களில் ரூ.11 கோடி அளவுக்கும் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.1,350 கோடியும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1,080 கோடியும் தள்ளுபடி செய்யப்படுள்ளது.
கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 300 பவுன் நகை காணாமல் போயுள்ளது.
ரூ.11,60,000 கடன் திருப்பி தரப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த நடவடிக்கைகள் ஏதுமில்லை.
இதேபோல், போலி ஆவணங்களை உருவாக்கி வேளாண்மைத் துறையில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இவற்றை பற்றி ஆய்வு நடத்தவிருப்பதாக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.