டெல்லி: நாடு முழுவதும் டிரோன் எனப்படும் ஆளில்லா விமான பயன்பாடு அதிகரித்துள்ளதால், டிரோன் இயக்க அரசு அனுமதி பெற வேண்டும்புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை உள்பட நாடு முழுவதும் 10 நிறுவனங்களுக்கு டிரோன் இயக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிட்டல் யுகத்தின் அபரிதமான வளர்ச்சி இன்று ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஆளில்லா விமானம் எனப்படும் சிறிய ரக டிரோன்கள், பின்னர் காவல்துறையினர், கொரோனா காலக்கட்டத்தில் மக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தத் தொடங்கினர். உலக நாடுகள் ராணுவத்திலும் டிரோன்களை கொண்டுவந்து எதிரி நாட்டின் இலங்கை தாக்கத் தொடங்கின. தற்போது பயங்கரவாதிகளுமி டிரோன்களை வைத்து மிரட்டத்தொடங்கி உள்ளனர். இதனால் இந்தியாவில் டிரோன்கள் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. டிரோன்கள் பயன்படுத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
இந்த நிலையில், தொழில்ரீதியாக டிரோன்களை பயன்படுத்த சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய 10 முக்கிய நகரங்களில் உள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட 10 நிறுவனங்கள் மட்டுமே, நிபந்தனையின் அடிப்படையில் ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் உள்ள டிராக்டர்ஸ் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், பயிர்களின் வளத்தை மதிப்பிடுவதற்கும், பயிர்களுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கவும் டிரோனைப் பயன்படுத்தி திரவங்களைத் தெளிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கர்நாடக அரசுக்கும், மும்பை, மேற்கு வங்கத்தின் பர்ன்பூர், ஹைதராபாத், அகமதாபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களில் உள்ள சில நிறுவனங்கள் குறிப்பிட்ட பணியை மேற்கொள்வதற்காக ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி ஓராண்டு காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.