காபூல்
காபூல் நகரில் தாலிபான்களிடம் இருந்த தப்ப விமான சக்கரத்தில் ஏறி பயணம் செய்த இருவர் கீழே விழுந்து இறந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரைத் தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து நாட்டில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. அங்கிருந்து தப்ப பலரும் முயன்று வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டுக்குப் பல நாடுகள் விமானச் சேவையை நிறுத்தி உள்ளன.
நாட்டை விட்டுத் தப்பி ஓட ஆயிரக்கணக்கானோர் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். விமானங்களில் ஏற பேருந்துகளைப் போல் பலர் முண்டியடித்து ஏறி வருகின்றனர். காத்திருக்கும் அனைவருக்கும் போதுமான விமானங்கள் தற்போது இயங்கவில்லை.
இந்நிலையில் காபூலில் இருந்து தப்பிக்க இருவர் ஓடும் விமானத்தில் சக்கரத்தில் ஏறி பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். விமானம் வானத்தில் ஏறும் போது சக்கரம் உட்செல்லும் என்பதால் பிடிக்க ஏதும் இன்றி இருவரும் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். இது உலக அளவில் கடும் துயரத்தை உண்டாக்கி இருக்கிறது.
