அருள்மிகு விஜயராகப் பெருமாள் திருக்கோவில்:- திருப்புட்குழி.
ஒப்பற்ற நாதனாம் இறைவன் நாராயணன் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த சிறப்பு மிக்க ஓர் அவதாரம் இராமாவதாரம். அத்தகைய இராமாவதார காலத்தில் தோன்றிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். “புள்” என்பதற்கு “பறவை” என்பது பொருள். “திரு” என்றால் “மரியாதை”.   ஜடாயு என்ற பறவைக்கு இராமபிரான் ஊழியம் செய்த தலம் என்பதால் “திருப்புட்குழி” என்பது பெயர்.
 தலவரலாறு:-
இராவணன் சீதா பிராட்டியை, சிறை எடுத்துச் செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டது.  இராவணனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது.  சீதையைத் தேடி அவ்வழியே வந்த இராம, லட்சுமணரிடம் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற செய்தியைத் தெரிவித்து மறைந்தது.
இராமபிரானின் தந்தை தசரதனுக்குத் தோழர் ஜடாயு என்பது குறிப்பிடத்தக்கது. இராமபிரான் ஜடாயுவைச் சிறிய தந்தையாக எண்ணி தன் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியை முதலியவற்றை ஜடாயுவிற்குச் செய்தார்.
அவற்றை இத்தலத்தில் செய்ததாகவும், அதனால் இத்தீர்த்தம் “ஜடாயு புட்கரணி” என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 திசை மாறிய தாயார் :-
பெருமாள் கோவில்களில் திருமகள் தாயார் பெருமாள் சன்னிதிக்கு இடப்பக்கமாகச் சன்னிதி கொண்டு அருள்வது வழக்கம். ஆனால், இத்தலத்தில் மட்டும் வலது புறமாகச் சன்னதி கொண்டு அருள்கிறார்.  மூலவருக்கு அருகிலும் திருமகள் தலை சாய்ந்த நிலையில் இடமாகவும், பூமிதேவி வலமாகவும் காட்சி தருகின்றனர்.
 தாயார் நிகழ்த்தும் அற்புதம் :-
இந்த மரகதவல்லித் தாயார் வறுத்த பயிரை முளைக்க வைக்கும் அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிரைப் பெண்கள் தங்களது மடியில் கட்டிக் கொண்டு இரவில் உறங்க வேண்டும்.   விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக் கொண்டு அருள்பாலிக்கிறார்.  பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவிற்கும் சகல மரியாதை உண்டு.  ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலிபீடமும் கோவிலுக்கு வெளியில் உள்ளது.
தாயார் சன்னதி பெருமாளின் இடப்பாகத்தில் அமைந்துள்ள திவ்யதேசம்.
திருமகள் தாயார் தலை சாய்ந்த நிலையில் காட்சி தரும் திருத்தலம்.
இராமானுஜரின் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த ஊர்.
திருமகள் தாயார் கோமள வல்லி என்ற திருநாமத்தில் காட்சி தரும் திவ்யதேசம்.
காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 12 கீ.மீ தொலைவில் பாலுசெட்டி சத்திரம் என்ற ஊரில் இறங்க வேண்டும். பேருந்து நிறுத்தத்தின் அருகாமையிலேயே திவ்யதேசம் அமைந்துள்ளது.