மதுரை: மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும், பக்தர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொன்மையான சைவ திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதின மடத்தின் தலைவரான மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். கடந்த 1975-ம் ஆண்டு முதல் சுமார் 46 ஆண்டுகள் மதுரை ஆதீனமாக பொறுப்பில் இருந்த அருணகிரிநாதர் சைவ சமய வளர்ச்சிக்கும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றி வந்தார்.
முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதீன மடத்துக்கு கொண்டு வரப்பட்டு. அவர் அமர்ந்த நிலையிலேயே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இன்று அவரது உடலுக்கு மடாதிபதிகள், ஆன்மீக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசின் சார்பாக, மதுரை ஆதீனம் உடலுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து இன்று பிற்பகல், அவரது உடல் மாசி வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் உட்கார்ந்தநிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகள் தருமபுர ஆதீனம் மாசிலாமணி சுவாமி உள்ளிட்ட ஆதீனங்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.