சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூபாய் 626 கோடி மதிப்பிலான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக அரசின் 2021-22ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில், தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் காகிதமில்லா முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூபாய் 626 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 100 கோயில்களில் ரூபாய் 100 கோடி செலவில் தேர் மற்றும் குளங்கள் சீரமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் போதிய நிதி வசதியில்லாத 12 ஆயிரத்து 955 ஆலயங்களல் ஒரு கால பூஜை திட்டத்திற்காக ரூபாய் 130 கோடி ஒதுக்கப்பட்டு, அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் புதியதாக சித்தா பல்கலைகழகம் அமைக்கப்படும். பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்தமருத்துவ கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மை வாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.
தமிழக சுற்றுலாத்துறைக்கு 187.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க ரூ. 6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் உதவி சங்கத்திற்கு ரூ. 4.15 கோடியும் கிறித்துவ பெண்கள் உதவி சங்கத்திற்கு ரூ. 2.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.