டில்லி

மீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை எதிர்த்து 14 கட்சிகள் டில்லியில் பேரணி நடத்தி உள்ளன.

ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம், வேளாண் சட்டம், விவசாயிகள் போராட்டம், விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டன.  ஆகவே, அவை நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. மத்திய பெகாசஸ் நிறுவனத்திடம் இருந்து எந்த உளவு மென்பொருளையும் வாங்கவில்லை என தெரிவித்தது.

 ஆனால் அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், இப்பிரச்சினை குறித்துக் கண்டிப்பாக இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தின.  , கூட்டத் தொடரின் 17வது நாளான நேற்று முன்தினம் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் மேற்கண்ட விவகாரத்தைக் கிளப்பி அமளியில் ஈடுபட்டன. இதையொட்டி, மக்களவையும், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இன்று வரை கூட்டத் தொடர் நடக்க இருந்த நிலையில், முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி தலைவரும், ராகுல் காந்தி தலைமையில் 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நேற்று காலை கூடி ஒரு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர், இக்கட்சிகளின் மூத்த தலைவர்களும், எம்பி.க்களும் ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி ஜனாதிபதி மாளிகைக்குப் பேரணியாகப் புறப்பட்டனர்.

காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் நாடாளுமன்றத்துக்கு எதிரே உள்ள விஜய் சவுக்குடன் பேரணியை முடித்துக் கொண்டனர். அங்கு கூட்டத் தொடரை முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.