டில்லி

காங்கிரசார் கணக்குகள் டிவிட்டரில் முடக்கம் செய்துள்ளதற்கு அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரக்கொலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் அந்த சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து அவர்கள் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார்.   இதனால் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

இதையொட்டி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் முக்கிய தலைவர்களும் இதே படத்தை தங்கள் டிவிட்டர் கணக்கில் பதிந்தனர்.  அவர்களுடைய டிவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.  இதற்கு நாடெங்கும் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில்,

“பாஜக அரசு டிவிட்டர் கணக்குகளை முடக்குவது மூலம் நீதியின் குரலை முடக்க நினைக்கும் வேளையில் நாம் உண்மையான நிலவரத்தை மறந்து விடக் கூடாது.

இந்திய நாட்டுத் தலைநகரில் ஒரு 9 வயது தலித் சிறுமி பலாத்காரக் கொலை செய்யப்பட்டதும் அவர் உடலை எரிக்க வலியுறுத்தியதும் உண்மையான நிலவரம் ஆகும்.

டில்லி காவல்துறையினர் இந்த புகாருக்கான முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய 15 மணி நேரம் ஆனதும் உண்மையான நிலவரம் ஆகும்.

பிரதமர் மோடி அவர்களே ஒரு அப்பாவி குழந்தை மீது நடந்த கொடூரமான குற்றம் குறித்து நீங்கள் ஒரு வார்த்தை கூட பேசாமல் உள்ளது ஏன்?”

எனப் பதிந்துள்ளார்.