டில்லி

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களில் டிவிட்டர் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.

தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்கள் மூலம் பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களையும் செய்திகளையும் தெரிவித்து வருகின்றனர்.   பல நேரங்களில் அரசு தரப்பில் இருந்தும் செய்திகள் டிவிட்டர் மூலமே தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் டிவிட்டர் கணக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக முடக்கப்பட்டு வருகிறது.   முதலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.  அது இன்று வரை தொடர்கிறது.

ராகுல் காந்தி டில்லியில் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரைச் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார்.  இதையொட்டி அவரது கணக்கு முடக்கப்பட்டது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இதே படத்தைப் பதிந்தனர்.

இதையொட்டி டிவிட்டரில் பல காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக சுர்ஜிவாலா,  மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலரின் கணக்குகள் அதே படத்தை பதிந்ததற்காக முடக்கப்பட்டுள்ளன.