கரூர்: மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மேலும் அழுத்தம் கொடுக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி கரூரை அடுத்த காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இணைந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கொரோனா 3வது அலை வந்தால் எதிர்கொள்ளும் விதத்தில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மதுரை எய்ம்ஸ் தொடர்பான கேள்விக்குபதில் அளித்தவர், மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார் என்று கூறினார்.
தமிழத்தில் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. 2018-ல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதாக அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 27-ல் மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டும்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் தற்போது 31 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், பாராளுமன்றத்தில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த பதிலில், ‘‘திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்வதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அது தவிர வேற எந்த டெண்டரும் விடப்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கப்படும் தேதி தற்போது இல்லை. எப்போது தொடங்கும் எனத் தெரியாது. மதுரை எய்ம்ஸ் கட்டி முடிப்பதற்கான திருத்தப்பட்ட இலக்கு நிறைவுத் தேதிக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தியஅரசின் பதிலின் மூலம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.