சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 8ந்தேதி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்த நிலையில், இன்று (10ந்தேதி) வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அசூர வேகத்தில் ரெய்டு நடத்தி வருகிறது.

திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று வேலுமணிக்கு சொந்தமான 60இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி செயல்பாடு வரவேற்கப்பட்டாலும், கடந்த அதிமுக ஆட்சியில், இதே லஞ்ச ஒழிப்புத்துறைதான் எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறியது.

சென்னை மாநகராட்சியில் டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை சென்னைஉயர்நீதிமன்ற  நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, லஞ்சஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதையடுத்து, இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் வழக்கு பதிய முகாந்திரம் இல்லை என்று முந்தைய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் புதிய மனு தாக்கல் செய்தார். அதில்,  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து, சிறப்பு குழு அமைத்து விசாரித்ததாகவும், இந்த விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.

இந்த வழக்கு மே மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், வழக்கின் போக்கும் திசை திரும்பியது. வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதறகு வேலுமணி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதையடுத்து,  வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரிய வழக்கை ஆகஸ்ட் 2 வது வாரத்துக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், திமுக சட்டத்துறை செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி நேற்று முன்தினம் (10ந்தேதி) அன்று லஞ்சஒழிப்புத்துறை புதிய புகார் பட்டியல் அளித்தார். அதையடுத்து, 09-08-2021 என்ற நேற்று தேதியில் எஸ்.பி.வேலுமணி மீது FIR பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். 

 எம்எல்ஏ விடுதியில் எஸ்.பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சோதனையை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட மொத்தம் 17 பேர் மீது 3க்கும் அதிகமான பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.  ஐபிசி பிரிவு 120-B, சட்ட விரோத செயலை செய்வது, குற்றசதி மேற்கொள்ளவதற்கு எதிரான பிரிவு. ஐபிசி பிரிவு 420 மற்றும்,  ஊழல் தடுப்பு 1988 சட்ட பிரிவு : 109 IPCன் 13 (2) r/w 13 (i) (c) and 13 (1) (d) பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

A1 ஆக எஸ். பி வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. A2வாக பி. அன்பரசன் என்பவரும், A3 ஆக கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனமும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இது போக கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ், ஜேசு ரோபர்ட் ராஜா, தி எஸ் டேக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிட்டட், Constronics இன்ப்ரா லிமிட்ட, கான்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிட்டட், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லரி பிரைவேட் லிமிட்டட், ஆலயம் பவுண்டேஷன் பிரைவேட் லிமிட்டட், வைதுர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிட்டட், ரத்னம் லட்சுமி பிரைவேட் லிமிட்டட், ஆலம் தங்கம் மற்றும் வைரஸ் பிரைவேட் லிமிட்டட், ஏ. ஆர். இ.எஸ். பி.இ பிரைவேட் லிமிட்டட், சிஆர் கட்டுமான நிறுவனந்தின் கு. ரஞ்சன் மற்றும் சில அதிகாரிகள் மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பதுபோல, லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த விசாரணை அறிக்கையில், ஊழலுக்கு மூகாந்திரம் இல்லை என்று கூறிய நிலையில், இன்று மூகாந்திரம் உள்ளது என்றும், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாக கூறுவதும் வியப்பை அளிக்கிறது.

ஒரே நாளில் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினரின் நடவடிக்கை வரவேற்க பட வேண்டியது. இதுபோன்று ஒவ்வொரு புகாரின்பேரிலும் நடவடிக்கை எடுத்தால், தமிழகம் ஊழலற்ற மாநிலமாக, தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் வியப்பேதும் இல்லை.