சென்னை

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையா, ராஜா போன்றோருடன் பங்கேற்று வரும் பாரதி பாஸ்கருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  பேச்சுத்திறமையில் வல்லவரான இவர் கெமிகல் எஞ்சினீயரிங் படித்து எம் பி ஏ படித்துள்ளார்.   ஒரு முன்னணி தனியார் வங்கியில் அதிகாரியாகப் பணி புரிந்து வருகிறார்.

பாரதி பாஸ்கர் சன் டிவியில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். தவிரப் பல தொலைக்காட்சிகளில் தொடர்ந்து பட்டிமன்றங்களில் கலந்து கொண்டுள்ளார்.  இவருக்கு எதிர் பேச்சாளராக உள்ள ராஜாவோடு இவர் போட்டி போட்டுப் பேசுவதை ரசிக்காதோர் யாருமே இல்லை எனச் சொல்லலாம்.

இன்று பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதையொட்டி மூளையில் அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரதியின் கணவர் பெயர் பாஸ்கர் லட்சுமணன் ஆகும்.  இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.   பாரதி பாஸ்கர் விரைவில் குணம் பெற வேண்டும் என அவரது நண்பர்களும் ரசிகர்களும் சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.