ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு ஊரை கூட்டுமளவிற்கு கத்தும் குழந்தையைப் பார்த்து கழுதைப் பால் கொடுத்திருப்பார்களோ என்று கேட்பது வழக்கம்.
கழுதைப் பால் கொடுக்கும் வழக்கம் இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு 5000 ரூபாய் விற்ற ஒரு லிட்டர் பாலின் விலை இப்போது 10,000 ரூபாய் என்று இரு மடங்காக உயர்ந்திருக்கிறது.
பசும் பால், ஆட்டுப் பால் என்று மற்ற கால்நடைகளின் பாலில் இல்லாத அளவு வயிற்றுக்கு இதமளிக்கும் லாக்டோபேசில்லஸ் கழுதைப் பாலில் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவின் கால்நடை வளர்ச்சி துறையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இதய நோய்கள், தொற்று நோய்கள், கல்லீரல் தொடர்பான நோய்கள், காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்த கழுதைப் பால் பயன்படுத்தப் படுவதாக கூறினார்.
தாய்ப்பாலுக்கு நிகராகக் கருதப்படும் இந்தப் பாலில் மற்ற பாலை விட 80 சதவீதம் அளவுக்கு லாக்டிக் ஆசிட் பாக்டீரியா இருப்பதாகக் கூறப்படுகிறது.
கழுதைப் பால் உற்பத்தி மிகவும் குறைவான அளவே உள்ளதாலும், இதன் பயன்கள் கருதி பயன்பாடு அதிகரித்திருப்பதாலும் 10 மில்லி லிட்டர் அளவு பால் ரூ. 100 க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் இந்தப் பாலின் பயன்பாடு அதிகம் இல்லை என்றபோதும், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் இதை உலர் பால் பவுடராக குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உணவுகளில் சேர்க்கப் படுகிறது.
மேலும், கழுதைப் பால் மிகச் சிறந்த சரும பாதுகாப்பு அம்சம் நிறைந்ததாகக் கூறப்படுகிறது, சாக்லேட் மற்றும் அழகு சாதனப் பொருட்களிலும் இதைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இருந்தபோதும், கழுதைப் பாலை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நேரடியாகப் புகட்டுவது குறித்து மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் அவசியம் என்றும் கூறுகின்றனர்.