சென்னை தலைமை செயலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்ட விவரங்கள் பற்றிய 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
அதில், கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாட்டின் நிதி நிலை, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 2016 -21ல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து இறங்கியபோது, தமிழ்நாட்டின் கடன் அளவு ரூ.34,540 கோடியாக இருந்தது. அதே ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், 2006-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி முடிவடையும்போது, கடன் அளவு ரூ.63,848 கோடியாக அதிகரித்தது.
அடுத்து, 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவடையும்போது, கடன் அளவு 1.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. பிறகு, 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடன் அளவு ரூ.2.28 லட்சம் கோடியாக கூடியது. 2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைத்த நிலையில், 2021-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் கடன் அளவு ரூ. 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.
இந்த ஆண்டு தொடக்கத்தில், இடைக்கால பட்ஜெட்டை அ.தி.மு.க. தாக்கல் செய்தபோது, தமிழகத்தின் கடன் அளவு ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கடன் அளவு ரூ.5.70 லட்சம் கோடியாக உயரும் என்றும் அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் கடன் அளவு 1,305 சதவீதம் அதிகரித்துள்ளது. மடங்கில் கணக்கிடும்போது 13 மடங்கு உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006-2011 தி.மு.க. ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16 சதவீதமாக ஆக உள்ளது வருமானம் இல்லாத அரசாங்கம் எந்த பிரச்சினையை சந்திக்கும் என்பது அனைவரும் அறிந்ததே; தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது.
கடந்த 2011-2016 வரையிலான ஜெயலலிதா அரசில் வருவாய் – செலவு ஓரளவு சமமாக இருந்தது கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.50 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 5 வருடங்களில் பெற்ற ரூ.3லட்சம் கோடி பொதுக்கடனில் ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய பயன்படுத்தப்பட்டது.
கொரோனாவிற்கு முன்பே தமிழக நிதி நிலையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது, கடனை அதிக அளவில் சார்ந்திருக்கும் வகையில் தமிழக நிதி நிலை உள்ளது.